கடந்த திங்கட்கிழமை அதிகாலை மியன்மாரில் இராணுவபுரட்சி ஏற்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி மற்றும் அரசுத்தலைவர் இருவரும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆனால் மேற்படி இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன.
“கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது, இருப்பினும் நாங்கள் கவலைப்படுகிறோம். அவர்களின் புகைப்படங்களை வீட்டிலேயே காண முடிந்தால் நிம்மதியாக இருக்கும்” என்று தன்னை இனம் காட்டிக் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏ எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் தலைநகர் நெய் பை தவ் நகரில் உள்ள தங்கள் அரசாங்க வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , இதை “ஒரு திறந்தவெளி தடுப்பு மையம்” என்றும் விவரித்தார்.