பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.
நேற்று காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வான் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர்.
கடந்த திங்கட்கிழமை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை காசாவில் 153 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 39 சிறுவர்களும் 22 பெண்களும் அடங்குவர். அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்களில் தங்கள் தரப்பில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.