பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 39,000ஐ நெருங்கியது.
இஸ்ரேலிய இராணுவம் காசா, யெமன் மற்றும் லெபனானில் கடும் தாக்குதல்களை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் கடும் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு போராட்ட குழுக்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இஸ்ரேல் நேற்று (21) அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இஸ்ரேலின் நெருங்கி நட்பு நாடான அமெரிக்காவும் ஈடுபட்டிருக்கும் நிலையில் யெமனில் இருந்து வீசப்பட்ட ஏவுணை ஒன்றை இடைமறித்தாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. முற்றுகையில் உள்ள காசாவில் இஸ்ரேல் தனது உக்கிர தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையிலேயே இந்த ஏவுகணை இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளது.
காசாவெங்கும் நடத்தி வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளது. மத்திய காசாவின் நுஸைரத் மற்றும் புரைஜ் பகுதிகள் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு காசாவின் ரபாவில் உள்ள சவூதி மாவட்டத்தில் தற்போது கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் சரமாரி பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் அங்குள்ள குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகள் குறிப்பிட்டிருப்பதோடு பிரதான துறைமுகம் ஒன்றை போர் விமானங்கள் தாக்கியதற்கு பதிலடி கொடுப்பதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹுதைதா துறைமுகம் மீதான தாக்குதலினால் எரியும் தீ மத்திய கிழக்கெங்கும் தெரிவதாகவும் அதன் முக்கியத்துவம் தெளிவாகிறது என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் குறிப்பிட்டுள்ளார்.
யெமனில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் பற்றி விபரித்த கலன்ட், ஹூத்திக்கள் எம்மை தாக்கத் துணிந்தால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் பிரதான நகரான டெல் அவிவ் மீது நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இஸ்ரேல் யெமனில் தாக்குதலை நடத்தியது.
ஹுதைதா மீதான தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு மேலும் 87 பேர் காயமடைந்ததாக ஹூத்திக்கள் தெரிவித்துள்ளனர்.
வொஷிங்டன் செல்லும் நெதன்யாகு
பெரும் உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கும் காசாவில், போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படும் வரை இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இஸ்ரேலில் 1195 பேர் கொல்லப்பட்டு 250 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பலஸ்தீன போராளிகளின் கடந்த ஒக்டோபர் 7 தாக்குதலை அடுத்தே காசாவில் போர் வெடித்தது.
தொடர்ந்தும் 116 பேர் வரை பயணக்கைதிகளாக காசாவில் இருப்பதாகவும் இவர்களில் உயிரிழந்த 42 பேரும் அடங்குவதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாகக் கூறி காசாவில் இஸ்ரேலியப் படை வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக ஒன்பது மாதங்களுக்கு மேலாக இடைவிடாமல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 39,000ஐ நெருங்கியுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்மூலம் அங்க கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,983 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 89,727 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தப் போர் காசாவில் பட்டினி மற்றும் சுகாதார நெருக்கடி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முடக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசா கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி உள்ள என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
காசாவுக்குள் கட்டுப்பாடு இன்றி மேலும் பல தொற்றுகள் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் கிறிஸ்டியன் லின்ட்மியர் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார்.
பல மாதங்களாக காசாவில் போர் நீடிக்கும் நிலையில் அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேலிய மக்களிடம் இருந்து அரசுக்கு கடும் அழுத்தம் இருந்து வருவதோடு இஸ்ரேலிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
‘அவர்களை மீட்டு வா’ என்ற கோசங்களுடனான ஆர்ப்பாட்டம் டெல் அவிவில் நேற்று முன்தினமும் இடம்பெற்றது. போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் புதன்கிழமை (24) வொஷிங்டனில் அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். ‘அவர் அமெரிக்கா போகக் கூடாது. முதலில் உடன்டிக்கை ஒன்றில் கைச்சாத்திட்ட பின்னரே வொஷிங்டன் செல்ல வேண்டும்’ என்று டெல் அவிவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 64 வயது அபிரா அஸ்ரிலி என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
‘போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது, பணயக்கைதிகளை மீட்பது மற்றும் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த பாதையில் எங்களை அழைத்துச் செல்லக்கூடிய உடன்படிக்கை ஒன்றை பெறும் இலக்கை நோக்கி நாம் முன்னேறிச் செல்வதாக நான் நம்புகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயிம் எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் இடம்பெறும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தற்போது எந்த முன்னேற்றமும் இன்றி ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.