ஜேர்மனியின் 16 மாநிலங்கள், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் 10 பேர் வரை கூடியிருப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளன.
குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் தொற்று பரவலை தடுக்க கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை டிசம்பர் 20 வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது பாடசாலைகள் மற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் அதேவேளை மதுபான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகளை குறைவாக வைத்திருந்த ஜேர்மனி, தொற்று அதிகரிப்பதை நிறுத்தியுள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நிவாரணம் வழங்க அம்மாநில முதல்வர்கள் விரும்பும் அதேவேளை டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை அதிகபட்சம் 10 பேரை சந்திக்க அனுமதிக்கவும் தீர்மானித்துள்ளனர்.
அத்தோடு புத்தாண்டு தினத்தன்று பட்டாசுக்கு தடை விதிக்கப்படாது என்றாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் மாதத்தில் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கும் உதவி நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே நவம்பர் மாத உதவித் தொகை 10-15 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
இதேவேளை டிசம்பர் மாதத்தில் மேலதிக செலவுகள் ஏற்படும் குறிப்பாக 15-20 பில்லியன் யூரோக்கள் தேவைப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.