கிளிநொச்சியில் எதிர்வரும் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, மக்கள் ஏதேனும் வகையில் ஒன்று கூடலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றுக்குள்ளாவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படியில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாவீரர் தினத்தை நடத்தக்கூடாது என நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி உத்தரவு பிறப்பித்த நிலையில், 21ஆம் திகதி முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ளதை அடுத்து, அந்த வீதிகளில் பல வீதி தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வீதிகளை கடக்கும் நபர்கள் மற்றும் வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி மக்களை மிக அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.