மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசத்திற்காக உயிர்கொடுத்தவர்களை நினைவுகூரும் முயற்சிகள் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய்
யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சுற்றாடலில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது அப்பகுதியில் பெருமளவு படையினர், பொலிஸாா் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
சிரமதானத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மண்வெட்டி மற்றும் சில பொருட்களுடன் வந்த இராணுவத்தினர் சிலர் பொதுமக்களுக்கு இடையில் புகுந்து நின்று தாங்களும் துப்பரவு செய்வது போல அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.
அத்துடன் அங்கு நின்றிருந்த ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரையும் புகைப்படம் எடுத்ததுடன், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இச்சிரமதானத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறை
பருத்தித்துறை முனைப்பகுதியில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் நடைபெற்றது.
அதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவா்கள் அங்கு சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியும், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் சிரமதானம் முடிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் தத்தமது வாகனங்களில் திரும்பிய வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து வந்தும் அச்சுறுத்தியுள்ளனர்.