கொரோனா தடுப்பூசியின் இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டவர்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படுகின்றார்கள் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாகவே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்களுக்கு, மேலதிக தடுப்பூசி தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைந்தவர்களுக்கு பைசர், பையோஎன்டெக் மற்றும் மொடோர்னா ஆகிய தடுப்பூசிகளின் மூன்றாவது மருந்தளவை பெற்றுக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 473 பேருக்கு அஸ்ரா செனக்கா தடுப்பூசியின் முதலாவது கட்டமும் , 8 லட்சத்து 69 ஆயிரத்து 853 பேருக்கு இரண்டாவது கட்டமும் செலுத்தப்பட்டுள்ளது. 92 லட்சத்து 46 ஆயிரத்து 429 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது கட்டமும், 31 லட்சத்து 16 ஆயிரத்து 114 பேருக்கு இரண்டாவது கட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
2 லட்சத்து 51 ஆயிரத்து 963 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதலாம் கட்டமும் 16 ஆயிரத்து 602 பேருக்கு 2 ஆவது கட்டமும் செலுத்தப்பட்டுள்ளது. 7லட்சத்து 61 ஆயிரத்து 136 பேருக்கு மொடேர்னா தடுப்பூசியின் முதலாவது கட்டம் வழங்கப்பட்டுள்ளது.