கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று சிறுமிகளும் வீட்டில் இருந்து வெளியேறியமைக்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாமையால் அது குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் தந்தை நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த மூன்று சிறுமிகளும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்கள் சம்பந்தமாக எந்த தகவலும் வீட்டுக்கு கிடைக்கவில்லை என தந்தை வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், அவர்களின் உறவினர் முறை சகோதரியான சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் மூவரும் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவருகிறது.
இந்த மூன்று சிறுமிகளும் நேற்று முற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா மற்றும் காலிமுகத் திடல் பகுதிகளில் காணப்பட்டுள்ளதாக அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.