கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி. தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். இந்த சட்டமூலம் நகரசபை சட்டம் மற்றும் முதலீட்டு சட்டம் உள்ளிட்ட 7 சட்டங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் காணப்படுகிறது.
அத்தோடு இந்த சட்ட மூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக நகரம் எந்தவொரு நகரசபைக்கோ பிரதேசசபைக்கோ உட்படாததாகவே காணப்படுகிறது. குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்டதாகக் கூட இது அமையவில்லை.நாட்டில் எந்தவொரு பகுதியானாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அவற்றை ஆட்சி செய்வார்கள். ஆனால் கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ள 1115 ஏக்கர் நிலப்பகுதியினை ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவையன்றி வேறு எவரும் நிர்வகிக்க முடியாது. அத்தோடு இங்கு பொருட்களை கொள்வனவு செய்து வெளியேறும் போது அவற்றுக்கு வரி செலுத்தப்பட வேண்டும்.
இதில் சீனாவின் 80 வீத முதலீடு காணப்படுவதால் குறித்த சீன முதலீட்டு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்பவும் அழுத்தத்திற்கு அமையவும் இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இராஜதந்திர பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதே இதன் இலக்காகும். மாறாக இலங்கைக்கு இதனால் எவ்வித நன்மையும் கிடையாது.