தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் செயற்பாடுகள், மற்றும் அதனுடன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறினார், ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாத ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது கேள்விக்கு உட்படுத்தும் கருத்துக்களாகும்.
தேசிய ரீதியில் அனைத்தையும் கையாள்வதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது யார்? எவர்? என்று தெரியாத புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவேன் எனக் கூறுவது யதார்த்தத்திற்கு அப்பால் பட்ட காரணியாகும்” என அவர் கூறியுள்ளார்.