சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். சுக்மா, பிஜப்பூர், தண்டேவாடா உள்ளிட்ட மாவட்டங்களின் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப்.பின் சோப்ரா கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட படைப் பிரிவுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.சுக்மா-பிஜப்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது
மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பல வீரர்களை காணவில்லை. அவர்கள் காட்டுக்குள் வழி தவறி சிக்கினார்களா? அல்லது ஆபத்தில் இருக்கிறார்களா? என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். அதேசமயம், தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அதேசமயம், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு பெண் மாவோயிஸ்டும் அடங்கும். இந்த நிலையில் காணாமல் போன வீரர்களில் 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம், உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 22 வீரர்கள் உயிரிழந்ததை பிஜப்பூர் எஸ்பி கமலோச்சன் காஷ்யப் உறுதி செய்தார்.
மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் வீரர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது:-
சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான பாதுகாப்பு படை வீரர்கள் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அமைதி மற்றும் முன்னேற்றத்தில் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்று கூறி உள்ளார்.