மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சரத் வீரசேகர போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் காரணமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களைக் கொண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை அச்சுறுத்துகின்றனர். இந்த நாட்டின் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் இந்த நாட்டை நிர்வகிக்க போதாதா? இவர்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை அடக்குவதற்கு புதிய சட்டத்தை இவர்கள் வேண்டுமென்கின்றனர். இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயல்கின்றனர்.
சீனி மோசடி, வெள்ளைப்பூண்டு மோசடி மாபியாக்களுக்கு எதிராக இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? மாபியாக்காரர்களின் அருகில் சென்று மண்டியிட்டு, ஊடக நிறுவனங்களுக்குள் ஒழிந்துகொண்டு, கீழ்த்தரமான ஊடகப் பிரசாரத்தை எதிர்பார்க்கின்றனர்.
இவர்கள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள். இந்த விடயங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை இன்று விசாரணைக்கு அழைக்கின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டால் சட்டத்தை மீறி இவர்கள் அடக்குகின்றனர். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களின் செயற்பாடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.