தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரை விமர்சிக்க சிங்கள பேரினவாத கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான கலையரசன் தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேசுவதில்லை என, ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் முகமாக செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதன் போது மேலும் பேசிய அவர்,தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று ஆட்சியமைக்கும் அரசாங்கங்களுக்கெல்லாம் வால் பிடிக்கும் கட்சியில்லை. கொள்கை ரீதியாக தமிழ் மக்களுடைய உரிமைகள் தொடர்பாகவே அரசுடன் பேசி தமது நோக்கை அடைவதற்காக உழைத்துவரும் ஒரு கட்சியாகும்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அரசுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவார் என்ற அதி நம்பிக்கையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தமையால் அம்பாறையில் தமிழ் பிரதிநித்துவம் ஆளும் தரப்பிலோ எதிர்தரப்பிலோ இல்லாமல் போனது.
அரசனை நம்பி புருசனை கைவிட்டநிலையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் அநாதரவாக இருப்பதை கருத்தில் கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமை, தமது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கினார்.அம்பாறை மாவட்டத்தின் தமிழ்தேசிய அரசியலின் கடந்தகால, நிகழ்கால,எதிர்கால வரலாற்றை கருத்தில் கொண்டே அவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் தேசியபட்டியல் வழங்கப்பட்டது.
நாம் வேறு ஒரு கட்சியில் வெற்றிபெற்ற ஒருவரையோ, அல்லது வேறு கட்சியூடாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவரையோ எந்த விதத்திலும் பிழையாக விமர்சிக்க மாட்டோம்.முதலில் அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொள்ளவேண்டும். ஒருகட்சி உறுப்பினரை இன்னொரு கட்சி உறுப்பினர் பிழையாக விமர்சிப்பது என்பது எந்தக்கட்சியாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றார்.