இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்துவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா கூட்டத் தொடர் பீதி தொற்றுக்கொண்டதை எடுத்துக்காட்டும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பிரீஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடிய சம்பவம் பதிவாகியுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைய திருத்தும் செயற்பாடுகள் தொடர்பிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பிரீஸ் எடுத்துரைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிரும் வகையில் கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுடனான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் அந்தச் சட்டமானது திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
உத்தேச திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார்.