சிறுமைப்படுத்த படுகிறதா தமிழீழ தேசிய சின்னங்கள்?.

சிறுமைப்படுத்த படுகிறதா தமிழீழ தேசிய சின்னங்கள்?.

தமிழீழ நாட்டின் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒவ்வொரு அடையாளங்களுக்கு பின்னாலும் ஒரு வரலாறும் , அதனோடு கூடிய அறிவியலும் , அதனை பிரகடனப்படுத்திய காரணமும் இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.
தமிழீழ வரலாற்றை , அதன் புனிதமான பக்கங்களை மக்களுக்கு சொல்லிக்கொடுக்க விரும்புபவர்கள் அதனை முழுமையாக கற்றறிய முடியாது விட்டாலும் தாங்கள் சொல்லும் விடயங்கள் குறித்தான விபரங்களின் உண்மைகளை உறுதிசெய்தபின்னர் வரலாற்று பதிவுகளாக வெளிகொணர வேண்டும். மாறாக தமது எண்ணத்தின் வெளிப்பாடுகளை தமது சொந்த கற்பனைகளை வரலாறாக கதைசொல்லி கடந்து செல்வது என்பது தமிழீழ வரலாற்றை சிதைக்கும் ஈனச்செயலுக்கு ஒப்பானது. அன்பார்ந்தவர்களே இந்த புரிதலோடு தமிழீழ வரலாற்றை சரியாக பதிவுசெய்ய முன்வாருங்கள் மாறாக எமது இனத்தின் வீரம் தீரம் தியாகம் நிறைந்த புனிதமான வரலாற்று குறிப்புக்களை சிறுமைப்படுத்தும் செயல்களில் இனிமேலும் ஈடுபட்டு வரலாற்று துரோகத்தை செய்யாதீர்கள்.

தமிழீழ தேசிய பறவையாக செம்பகம் உருவான கதை….

அண்மையில் ஒரு இணையவழி காணொளி ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, தன்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியென சித்தரித்தபடி மனிதநேய செயற்பாட்டாளாராக செயற்படும் ஒருவர் ஒரு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியது.. தலைவர் மேதகு வே.பிரபாகரனது பண்புகளை வெளிக்கொணருவதாக உருவாக்கப்பட்டிருந்த குறித்த காணொளியில் செம்பக பறவை தமிழீழ தேசிய பறவையாக உருவான கதையினை உருவாக்கி சொல்லி இருந்தார்.. குறித்த காணொளியினை புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் பல தமிழர்களுக்கும் பகிர்ந்திருந்தார் , அவர்களும் அதனை தமக்கு தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்திருந்தார்கள் .. இறுதியாக மாவீரர் நிகழ்விற்கான ஒரு நாடகத்திற்கு இந்த விடயங்களை ஒரு ஆசிரியர் பயன்படுத்தி ஒரு நாடகத்தை மாணவர்களிற்கு பழக்கியும் இருந்தார்…

காட்சி இவ்விதம் அமைந்திருந்தது..தலைவர் வாகனம் ஒன்றில் வந்துகொண்டு இருக்கிறார் .. இரவு நேரம் வீதியில் குறுக்காக ஒரு செம்பகபறவை வாகன வெளிச்சத்தில் இரைதேட பறந்துவந்து அடிபட்டு இறந்து விடுகிறது..உடனே வாகனத்தால் இறங்கிய தலைவர் மிகவும் வேதனையோடு அந்த பறவையினை தூக்கி பார்த்து அது அருகிவரும் செம்பக பறவையினம் என்பதை அறிந்துகொண்டு அதனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அன்றுமுதல் செம்பக பறவையினை தமிழீழ தேசிய பறவையாக அறிவித்ததற்கு அப்பால் செம்பகங்கள் வாழும் வனப்பகுதிகளூடாக இரவில் பயணிக்கும் வாகனங்கள் வெளிச்சங்களை அணைத்து விட்டு பயணிக்க வேண்டும் என்று பணித்ததாக நாடகம் தொடர்கிறது…..யார் உங்களுக்கு இந்த விடயங்களை சொன்னது என்று கேட்ட போது குறித்த காணொளி ஆதாரம் காண்பிக்கப்பட்டது.. காணொளியில் சொல்பவர்யார் அவருக்கு இந்த விடயம் எப்படி தெரியும் என்று கேட்ட பொழுது அவர் தலைவருடன் இருந்த முக்கிய போராளி என்பதற்கு அப்பால் தமிழீழ வரலாற்று ஆசியர் என்ற தகவலும் வழங்கப்பட்டது…

எனக்கு அந்த ஆசிரியரையும் அந்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பார்க்க பரிதாபமாகவும் வேதனையாகவும் இருந்தது..அந்த வேதனையின் வெளிப்பாடாக எனக்கு தெரிந்த வரலாற்று குறிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்

செம்பகம்…

கூர்மையான அலகுகள் , சிவந்த கண்கள் , கறுப்பும் , செம்மையும் இணைந்த தோற்றம் , பறப்பின் இயல்பில் பலவீனமான தன்மையை கொண்டிருந்தாலும் நிலந்தில் நிதானமாக நின்று இரைதேடும் இயல்பு இவ்வாறு சொல்லிக்கொண்டு போனாலும்…
அதிகாலை விடியலுக்கு முன்னர் விளைநிலங்களிற்கு சென்று பூச்சிகள் , நத்தைகள் , எலிகள் என அனைத்தையும் வேட்டையாடி விவசாயிகளது சேவகனாக பணிபுரியும் செம்பகங்களின் இயல்புகள் பலருக்கும் தெரியாத விடயங்களே. தமிழீழத்தின் முக்கிய பொருளாதார வளமான நெல்வயல்களை நத்தைகளதும், பூச்சிகளதும் , எலிகளதும் தாக்கத்தில் இருந்து தடுக்கும் இயற்கை காவலனாக செம்பகங்களே இருந்து வருகின்றன. குறிப்பாக நெல்வயல்களில் நத்தைகளின் தாக்கம் சூரிய வெளிச்சத்திற்கு முன்னராகவே அதிகமாக இருக்கும் , சூரிய கதிர்கள் வரத்தொடங்கியமும் நத்தைகள் புதர்களுக்குள் மறைந்துவிடும்.. இந்த நிலையில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் வயல் நிலங்களில் நத்தைகளை வேட்டையாடும் செம்பகங்களுக்கு இயல்பாகவே இருட்டிலும் கண்கள் நன்றாக தெரியும் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வது சிறப்பு.

(1)செம்பகங்கள் இரவிலும் பார்க்கும் திறன் கொண்ட பறவை இனம்,
(2)மற்றைய பறவைகளின் கூடுகளில் திருட்டுதனமாக குடிபுகுவதோ முட்டையிடுவதோ செய்யாது..
(3)தனது கூடுகளை வேறு எந்த உரியினமும் நெருங்காத வண்ணம் எச்சரிக்கையோடு பாதுகாத்து வரும் , அதாவது தனது கூட்டை தமது கண்காணிப்பில் பேணியபடியே செம்பகங்கள் தமக்கான இரைதேடும் பணியை செய்யும்.
(4) படைப்பில் வேகமாகவோ , உயரங்களுக்கோ , நீண்ட தூரங்களுக்கோ பறக்கமுடியாத பலவீனங்களை கொண்டிருந்தாலும் செம்பகங்கள் நடுக்கமில்லாத நிதானத்தோடு இரைகளையும் , எதிரிகளையும் நெருங்கி சென்று அவற்றின் பலவீனங்களை ஆராய்ந்து தாக்கும் திறனில் புலிகளுக்கு ஒப்போன விவேகத்தை கொண்டவை .

…இத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்த பறவை எமது கரும்புலிகளின் அடையாள நிறமான கருமையும் தேசிய கொடியின் சிவப்பும் மஞ்சளும் இணைந்த செம்மையும் கொண்டு இருப்பதும் , தமிழீழ பொருண்மீகத்தின் காவலனாக இருப்பதும் மேலும் சிறப்பாகும்.

இத்தனை விடயங்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களான தமிழேந்தி அண்ணன் , புதுவை இரத்தினதுரை அண்ணன் , இளங்குமரன் அண்ணன் , போன்றவர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தமிழீழ புத்திஜீவிகள் கொண்ட குழுவினால் தலைவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தலைவர் அவர்களால் தமிழீழ தேசிய பறவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.2003 சமாதானம் ஏற்பட்ட தன் பிற்பாடு A9 வீதியின் இருமருங்கும் வீதி புனரமைப்பிற்காக கனரகவாகனங்களால் கிளறப்பட்டு வேலைகள் நடந்த வேளை , கிளறப்பட்ட மண்ணுக்குள் இருந்த பூச்சி புழுக்களை இரையாக்க வந்த செம்பகங்கள் , A9 வீதியில் அதிகரித்து இருந்த வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நிலை அதிகரித்து இருந்தது…

இந்த நிலையில் சமாதானகாலம் எமக்கும் நன்மை பயிர்க்கிறதா தீமை பயிர்க்கிறதா என்ற பட்டிமன்றம் போராளிகளால் தலைவர் , பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது.. அந்த பட்டிமன்றத்தில் தலைவர் முன்னிலையில் மேஜர் மிகுதன் பின்வருமாறு ஒரு கருத்தை பதிவு செய்கின்றான்..

இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான உடன்படிக்கையினை தொடர்ந்து எமது தாயகத்தில் அதிகரித்துள்ள வாகன போக்குவரத்து தமிழீழ தேசியப்பறவையினத்தை தினம் தினம் அடித்தும் நெரித்தும் சாகடித்துவரும் நிலையில் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைக்கு சமாதானம் நன்மை பயிர்க்கிறதா தீமைபயிர்க்கிறதா என்று பட்டிமன்றம் நடத்த வந்துள்ளோம். இந்த செயல் குறித்த உங்களது உணர்வுகளில் இருந்து உண்மைகளை பேச முன்வாருங்கள் என்று பதிவு செய்கிறான்…தொடர்ந்து தலைவர் அவர்களால் வீதிகளின் வேககட்டுப்பாடுகளை இறுக்கிவதற்கான கட்டளைகள் காவல்துறையினர்க்கு வழங்கப்பட்டதற்கு அப்பால் வீதி புனரமைப்புகள் நடைபெறும் இடங்களில் வாகன வேகம் 10km/h வரை குறைப்பதற்கான நடவெடிக்கைகளும் மேற்கொள்ள படுகின்றன…

இங்கே இன்னுமொரு விடயம் கவனத்திற்கு உரியது.. அதாவது ஆளில்லாத உழவுவிமானங்களின் கண்காணிப்பில் இருந்து முக்கிய முகாம்களை பாதுகாப்பதற்காக இரவு நேரங்களில் சில முகாங்களுக்கான பாதைகளில் வெளிச்சத்துடன் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டும் இருந்தது..
மேலும் மட்டக்களப்பு , வாகறை , வெருகல் பிரதேச மக்களின் வாழ்வில் கௌதாரிகளதும் , காடைகளதும் இறச்சி முக்கிய உணவாகும்.. அதாவது கிழக்கு மாகாணங்களிலும் கௌதாரிகளும் காடைகளும் வாழ்கின்றன என்பதும் எமது தாயகம் தொடர்பான உண்மையான தகவல்களே.

நன்றி.
பாண்டியன் – மணலாறு.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *