முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் முருகன் துன்புறுத்தப்பட்டு வருகிறார் எனத் தெரிவித்துள்ள அவரது வழக்கறி ஞர் புகழேந்தி, முருகனின் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் “சிறையில் உள்ள முருகன் மீது இரண்டு பொய் வழக்குகளை சிறை நிர்வாகம் தரப்பில் திட்ட மிட்டு போட்டுள்ளனர். இது நளினி-முருகனின் விடுதலையை தடுக்க செய்யப்படும் சதியாகும். வேலூர் மத்திய சிறையில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க முருகன் முயன்றதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், வரும் 23ம் திகதி எழும்பூர் சிறைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தமிழர் கட்சி (தமிழகம்) அழைப்பு விடுத்துள்ளது.
தமிழர் கட்சி விடுத்துள்ள ஆர்ப்பாட்ட அழைப்புக்கான அறிவிப்பில்,
“இராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனைத் தனிமைப்படுத்தி துன்புறுத்தும் சிறைத்துறை மீது நடவடிக்கை எடு.
30 ஆண்டுகளாக சிறையில் வதைப்படும் ஏழு தமிழர்களை விடுதலை செய்.
20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறையாளிகளை விடுதலை செய்.
மாவோசியக் கட்சி சிறையாளிகள், தமிழ்த் தேச சிறையாளிகள் மீது தாக்குதல், தனிமைப்படுத்தல் போன்ற கொடுமைகளை நடத்தும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.