தமிழ் மக்கள் அல்லலுறும் போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா தற்போது தமிழ் மக்களுக்கு கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் நாங்கள் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வைத்துக்கொள்வோமே தவிர, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று கூறியவர்கள் இவ்வாறு விஜயங்களை மேற்கொள்வது பலத்த சந்தேககத்தை எழுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் வட மாகாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு சென்றிருந்தார்.
சீனத் துாதுவரின் பயணம் குறித்து இன்றைய தினம் சுரேஸ் பிரேமசந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், உலகத்தின் காவல்காரனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் சீனா முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற போதிலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை பயன்படுத்திக் கொண்டிப்பதாக கூறினார்.
தமிழ் மக்கள் யுத்த குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிராக உலக நாடுகளிடம் நீதி கேட்டு சர்வதேச மன்றங்களை அணுகியபோது இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றி வந்த சீனர்கள், இப்பொழுது தமிழ் மக்கள் மேல் பரிவுகொண்டவர்கள் போல் நடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு, வடமாகாணத்தில் ஏற்படுத்தப்படும் முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு இடமளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.