சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா சீனாவில் பரவாமல் இருந்தது.இந்நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது உருமாறி மீண்டும் சீனாவையே வந்தடைந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 14-ம் தேதி 23 வயது நிரம்பிய இளம் பெண் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திற்கு விமானத்தில் வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், அந்த கொரோனா உருமாறிய கொரோனா வைரசா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அந்த 23 வயது நிரம்பிய பெண்ணுக்கு பரவியுள்ளது.இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் என சீன அரசு நேற்று (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவிவிட்டது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறி மீண்டும் 2020 டிசம்பர் மாதம் சீனாவையே வந்தடைந்துள்ளது.