சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 23.9 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான கட்டுமானங்கள் சரிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. புயலைத் தொடர்ந்து உகான் நகரில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. இதில் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
புயல் மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உகான் நகரில் 6 பேர் உயிரிழந்ததாகவும் 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட சுஹோ நகரை மற்றொரு புயல் தாக்கியது. அங்கு மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்ததில் ஏராளமான தொழிற்சாலை கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்தப் புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.