இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அது குறித்த விசேட சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கோ அல்லது ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மாணவர்கள் அல்லது பாடசாலை நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்படுமாயின் அவர்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிகுறியுடையோர் முழு நேரமும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அத்தியாவசியமானதாகும்.
அதன் பின்னர் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்கப்பட வேண்டும். அத்தோடு பாடசாலை நிர்வாகம் இது குறித்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
பிரதேச சுகாதார அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகித்தால் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் போது மாணவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்படுமாயின் அவர்கள் பெற்றோரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தொற்றுறுதி செய்யப்படுபவர்களுடன் நேரடி தொடர்பினைப் பேணியவர்கள் 10 நாட்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நேரடி தொடர்பைப் பேணியவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாயின் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.