சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்!

சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்!

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

1948ஆம் ஆண்டு ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொளித்தும், எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ்மக்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாக ஸ்ரீலங்கா அரசு தமிழ்த்தேசத்தை அழித்து ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் ஸ்ரீலங்காத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் .

2009 இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப்படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு -2009 இல் ஆட்சியிலிருந்த இனவழிப்பு அரசாங்கம் மட்டுமல்லாது – சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது.

தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர்தேசங்களிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியை பெறுவோம்.

பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும்.

அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ ஸ்ரீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும்.

அந்தவகையில் இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இனியாவது ஸ்ரீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்புநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பருந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணி நடாத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலைய முன்றலில் காலை 8-30 மணிக்கு ஆரம்பமாகும். அதே நேரம் கிழக்கு மாகாணம் நேரத்தில் மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர நினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *