கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வு பல அரங்குகளில் நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 4-ஆம் நாளான நேற்று முன்தினம் (27/12/2020) அன்று கேரளாவின் பிரபல ராப் இசைப் பாடகர் வேடன் மற்றும் மேலும் பல பாடகர்கள், பறை இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தமது இசை நிகழ்வை வழங்கியிருந்தனர்.
இதில் இந்தியாவின் பிரபல ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ‘அறிவு’ எழுதிய ஈழத் தமிழர்களின் உரிமை மற்றும் அவர்களின் விடுதலைக்கான கோரிக்கையை வலியுறுத்தும் பாடல் ஒன்றும் ஈழத்தை சேர்ந்த சாந்தினி (அருணா) என்பவரால் பாடப்பட்டது. மேலும் எழுவர் விடுதலை, திருநங்கைகளின் பிரச்சனைகள் குறித்தும் கவிதை மற்றும் பாடல்கள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மார்கழி மாதம் கர்நாடக சங்கீத பாடல்கள் மட்டுமே சபாக்களில் பாடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் பறை, ஒப்பாரி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற மக்களிசையை உள்ளடக்கிய ஓர் இசை நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படுகின்றது.