செளதி அரேபியா: விலகும் பாகிஸ்தான், நெருங்கும் இந்தியா – என்ன நடக்கிறது?

செளதி அரேபியா: விலகும் பாகிஸ்தான், நெருங்கும் இந்தியா – என்ன நடக்கிறது?

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வியாழக்கிழமை ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது, அதன்படி மேற்குகரையின் பெரும் பகுதிகளை இணைத்துக்கொள்ளும் தனது திட்டங்களை இஸ்ரேல் நிறுத்திவைப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் தொடங்கவுள்ளது.

வளைகுடாவின் அரபு நாடுகளுடன் இஸ்ரேலுக்கு இதுவரை இராஜதந்திர உறவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தால் பாலத்தீன தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அரபு லீக் கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

அணி சேரும் இஸ்லாமிய நாடுகள்

ஒரு வகையில், அவரது கவலையும் நியாயமானது தான். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவுக்கு மற்ற இஸ்லாமிய நாடுகளின் முதல் எதிர்வினை இப்போது வெளி வந்துள்ளது. இந்த முடிவை எகிப்தும் ஜோர்டானும் வரவேற்றுள்ளன.

வளைகுடா நாடுகளுக்கிடையிலான உறவுகள், மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளிலும் இந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கன்று.

இந்தப் புதிய ஒப்பந்தம், இஸ்லாமிய நாடுகளை ஓரணியில் சேர்ப்பது போல் தோன்றுகிறது.

தற்போது, ​​உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மூன்று அணிகளாகப்பிரிவது தெளிவாகத் தெரிவதாக இஸ்ரேலைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார்.

இரான் தனித்து நிற்கிறது, செளதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இரண்டாவது அணியை ஒன்றாக வழிநடத்துகின்றன, மூன்றாவது அணி துருக்கி, மலேசியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்லாமிய உலகின் அணிகளின் இந்தப் பிரிவினை மேலும் அதிகரிக்கும்.

இந்தியாவின் மீதான தாக்கம்

இத்தகைய சூழ்நிலையில், இந்த முடிவு இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது. இந்தியா இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ராஜரீக ஆசிரியர் இந்திராணி பாக்சி கருதுகிறார்.

பாகிஸ்தானிடமிருந்து செளதி அரேபியாவை பறித்துக்கொண்டதா இந்தியா?

மத்திய கிழக்கின் பிராந்திய பாதுகாப்பு குறித்த இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் சிந்தனையும் ஒத்ததாகவே உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அங்கு வளர்ந்து வரும் சக்தியாகும். எனவே, இரு நாடுகளும் ஒன்றிணைந்தால், இந்தியாவும் அதை வரவேற்கும்.

ஆனால் இந்த நாடுகள் இணை சேர்வதால் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் ஏதேனும் விளைவு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இது குறித்து இந்திராணி அவர்கள் கூறுகையில், “சீனாவுக்கான தனது ஆதரவால் பாகிஸ்தான் தனிமைப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போதும் இஸ்லாமிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும், இந்த உண்மையை நாம் எளிதில் மறுக்க முடியாது. இஸ்லாமிய நாடுகளில் ஆணு ஆயுதங்களைக் கொண்ட ஒரே நாடாகப் பாகிஸ்தான் விளங்குகிறது. இதன் காரணமாக, இஸ்லாமிய நாடுகளில் இது சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது.” என்று தெரிவிக்கிறார்.

பாகிஸ்தான் இன்று சற்றே தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அதற்கான காரணம் அதன் கொள்கைகளேயாகும் என்று அவர் கூறுகிறார்.

முன்பு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பாகிஸ்தானுடன் இணக்கமாக இருக்கும் நாடுகளாகக் கருதப்பட்டன, ஆனால் சில காலமாக, பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடனான அவர்களின் உறவு அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது என்று ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கூட்டத்தை அவர் குறிப்பிடுகிறார், இதில் பாகிஸ்தான் விரும்பாத நிலையிலும் இந்தியா சிறப்புப் பார்வையாளராக அழைக்கப்பட்டது. இந்த அழைப்பிற்குப் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் அதைப் பொருட்படுத்தவில்லை.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *