”சச்சின், டிராவிட், சேவாக் என பல திறமையான உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தாலும், நாங்கள் யோசிப்பது ஒருவர் குறித்துதான். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செளரவ் கங்குலி போன்ற ஒருவர் இருக்கும்போது எங்களின் திட்டங்களை மாற்றவேண்டியிருக்கும். எப்படிப்பட்ட போட்டியாக இருந்தாலும் அவரின் அணியை வழிநடத்தும் பாங்கு இறுதிவரை எதிர் அணிக்கு சவாலாகவே இருக்கும். அவரை நீங்கள் விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் அவரின் திறமையை, தலைமைப் பண்பை மதித்தே ஆக வேண்டும்” என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனும், ‘டஃப் ஆஸி’ என்று புகழப்பட்ட ஸ்டீவ் வாக் ஒரு முறை தெரிவித்தார்.
மற்ற வீரர்கள் செளரவ் கங்குலி குறித்து பாராட்டுகளை தெரிவிப்பதற்கும், அதே விஷயத்தை ஸ்டீவ் வாக் கூறுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
ஏனெனில், 2001-ஆம் ஆண்டில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் ஒரு போட்டியில், அணித்தலைவர் என்ற முறையில் டாஸ் போடுவதற்கு ஸ்டீவ் வாக் காத்துக்கொண்டிருக்க, கங்குலி வேண்டுமென்றே தாமதமாக சென்றதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை ஸ்டீவ் வாகும் அப்போது முன்வைத்தார். பிற்காலத்தில் இதற்கு செளரவ் விளக்கமளித்தார். வேறு சில சந்தர்ப்பங்களிலும் செளரவ் கங்குலி மற்றும் ஸ்டீவ் வாக் இடையே நடந்த கருத்து மோதல்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.
அதேபோல் பல வெளிநாட்டு வீரர்கள் ஏன் சில இந்திய வீரர்களும்கூட செளரவ் கங்குலியுடன் எண்ணற்ற முறை முரண்பட்டுள்ளனர்.
ஆனாலும், அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம், அவரது சிறந்த தலைமைப் பண்பு மற்றும் அணியின் இளைய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு தயார் செய்யும் பாணிதான்.
சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், தோனி, ஜாஹீர் கான், கெளதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா என எண்ணற்ற வீரர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மாற்றியதில் கங்குலிக்கு பெரும்பங்குண்டு.
அதேபோல் அணியில் நிரந்தர இடமில்லாமல் அவ்வப்போது இடம்பெற்று கொண்டிருந்த விவிஎஸ் லக்ஷ்மன், 2001க்கு பிறகு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்ததற்கு, அவர் மீது தொடர்ந்து செளரவ் கங்குலி வைத்த நம்பிக்கை ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இதனை விவிஎஸ் லக்ஷ்மனும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் இந்திய கேப்டனான செளரவ் கங்குலி செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.