ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மிக பயங்கரமான நோய் மலேரியா. காய்ச்சல், தலைவலி மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மலேரியா தொடங்குகிறது. கொசு கடிப்பதன் மூலம் மக்களுக்கு பரவும் இந்த நோயை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், இதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டில் உலகளவில் 22.9 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4.09 லட்சம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க கண்ட பகுதியில் ஏராளமான குழந்தைகள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.மலேரியாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தபோதிலும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. புதிய தடுப்பூசி மற்றும் நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள மலேரியா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ததில், 77 சதவீதம் செயல்திறன் வாய்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. இதுவே அதிக செயல்திறன் கொண்ட மலேரியா தடுப்பூசி ஆகும். இதுவரை உள்ள தடுப்புசிகள் அதிகபட்சம் 55 சதவீதம் செயல்திறன் கொண்டிருந்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியானது, 2019ம் ஆண்டில் இருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. பர்கினோ பாசோ நாட்டில் 450 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருந்து பாதுகாப்பானது என தெரியவந்தது. அத்துடன் 12 மாதங்களுக்கும் மேலாக அதிகபட்ச செயல்திறனை கொண்டிருந்தது.
இதனையடுத்து நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள, 5 மாதம் முதல் 3 வயது வரையிலான 5000 குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்தி மெகா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது. ஆரம்பகட்ட சோதனைகளில் மலேரியா தடுப்பூசி 77 சதவீத செயல்திறனை நிரூபித்துள்ளதால், இது நோய்க்கு எதிரான ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கக்கூடும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.