சோமாலியா அரசியல் நெருக்கடி – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு.

சோமாலியா அரசியல் நெருக்கடி – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு.

சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விட்டுள்ளார்.கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருபவர் முஹம்மது அப்துல்லாஹி பர்மாஜோ.இவரது 4 ஆண்டுகால பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு முன்பாக அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தலை எப்படி நடத்துவது என்பதில் ஆளும் கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட வைத்தது.இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதில் எந்த பலனும் கிட்டவில்லை.இந்த சூழலில் அதிபர் முஹம்மது அப்துல்லாஹி பர்மாஜோவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை நாடாளுமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றியது.‌

அதிபர் முஹம்மது அப்துல்லாஹி பர்மாஜோவும் இதற்கு ஒப்புதல் அளித்தார். அதேசமயம் எதிர்க்கட்சிகள் இது அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம் சாட்டின. அதேபோல் சர்வதேச நாடுகள் பலவும் இதனை கடுமையாக விமர்சித்தன. இந்த அரசியல் குழப்பத்தால் சோமாலியாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.‌

ஒருபுறம் மக்கள் அதிபரின் பதவி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் ராணுவத்தில் ஒரு பிரிவு அதிபருக்கு எதிராக அணிதிரண்டு உள்ளது.‌இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் மொகாதீசுவில் அதிபர் ஆதரவு ராணுவ வீரர்களும் கிளர்ச்சி ராணுவ வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர்.

அதிபர் ஆதரவு ராணுவ வீரர்களின் முகாம் மற்றும் சோதனை சாவடிகள் மீது கிளர்ச்சி ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிபர் ஆதரவு ராணுவ வீரர்கள் முன்னாள் அதிபர் ஹாசன் ஷேக் முஹம்மது உள்பட எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளில் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராணுவத்தின் இருதரப்பு மோதலில் பலர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.‌ எனினும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.அரசியல் குழப்பங்களால் அந்த நாட்டு ராணுவத்தில் பிளவு மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் சோமாலியாவில் நிலவும் நெருக்கடி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.

இது அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சோமாலியாவின் தற்போதைய நிலையால் பொதுச்செயலாளர் மிகுந்த கவலையடைந்துள்ளார். அங்கு நிலவும் அரசியல் நெருக்கடிக்கு காரணமானவர்கள் அனைவரும் வன்முறையில் இருந்து விலகி அவர்களின் வேறுபாடுகளை உரையாடல்கள் மற்றும் சமரசத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தேர்தல் குறித்து ஒரு முறையான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி சோமாலிய மக்களுக்கு நம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *