ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் – இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றது என்பதன் வெளிப்பாடு தான் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை நிராகரித்து,
தொற்று நோய் தடுப்பு இராஜாங்க அமைச்சரும் கொவிட் – 19 கட்டுப்பாட்டு விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயம் பல தடவை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ, பிரதமர் செயலகமோ உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிடவேண்டும்.
ஜனாசாக்கள் எரிக்கப்படுமானால் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.
எவ்வாறானாலும் இத்தகைய விடயங்களில் அரசாங்கம் ஒருமித்து செயற்படவேண்டும். சமூக அமைப்புக்களும் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.