தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக அலெய்னா அம்மையார் வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய ஜனாதிபதி, கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும், ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் தொற்றொழிப்புச் செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்த தூதுவர், தனது சேவையைச் சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக, ஜனாதிபதி அவர்களுக்கு அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்தார்.
அலெய்னா பீ.டெப்லிட்ஸ் அம்மையாரின் எதிர்காலச் செயற்பாடுகள் சிறப்புப் பெற, ஜனாதிபதி இதன்போது தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, இலங்கைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் மார்டின் கெலி (Martin Kelly), அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசான் வல்கே (Susan Walke) ஆகியோரும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.