2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கூகுள் கூட அதிகம் உதவாது. நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.
ஆனால், இந்தியாவின் ராணுவ வரலாற்றில் இந்த தினம் மகத்துவம் வாய்ந்தது என்பது உறுதி.
கேரளாவில் கொச்சிக்கு மேற்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரபிக் கடலின் வெதுவெதுப்பான நீரில் இராணுவ சக்தியின் கண்கவர் காட்சி நடைபெற்றது. 60 போர் விமானங்கள், முப்பது போர்க்கப்பல்கள் மற்றும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றாக இருந்தன.
இவற்றின் மையத்தில் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கம்பீரமாக நின்றது. கூட்டுப்படைத் தளபதிகளின் முதல் மாநாடு அங்கு நடந்தது. இந்த வருடாந்தர மாநாட்டில், இந்திய அரசியல் தலைமை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை உயர் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும்.
டெல்லிக்கு வெளியே நடைபெற்ற முதல் கூட்டுப்படைத் தளபதிகள் மாநாடு இதுவாகும். இதில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
‘முப்படைகளின் கூட்டுத் தலைமை என்பது நீண்ட காலத் தேவையாக இருந்து வந்துள்ளது. முப்படைகளின் உயர் தலைமைக்கு மூன்று படைகளின் அனுபவமும் இருக்க வேண்டும். பாதுகாப்பு நிர்வாகத்தில் மூத்த பதவிகளிலும் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளன. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் இப்போது வரை செயல்படுத்தப்படாமலே இருந்துள்ளது என்பது வருத்தமளிக்கிறது.’ என்றார் பிரதமர்,
கடந்த ஆண்டு இதே நாளில், பிரதமர் மோதி தான் தவறு என்று நினைத்ததை சரிசெய்ய மிகப்பெரிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். முப்படைகளின் ஒருங்கிணைந்த தலைவர் பதவியை அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு 24 டிசம்பர் 2019 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு, அப்போதைய ராணுவத் தலைவர் பிபின் ராவத் கூட்டுப் படைகளின் முதல் தலைவராக (Chief of Defense Staff, CDS) நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த நியமனம் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் விதிகளுக்குட்பட்டுப் பணியாற்ற வேண்டிய ஒரு பதவியே.
சி.டி.எஸ் பதவியை உருவாக்குவதற்கான விதிகளுக்கான குறிப்பில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான கடற்படையின் முன்னாள் தலைவர் ஜெனரல் சுனில் லான்பா என்னிடம் கூறுகையில், “அந்தக் குறிப்பில் சி.டி.எஸ்-ன் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்த விவரம் இருந்தது. அதில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
இதனால் என்ன மாறிவிட்டது?
படைத் தலைமையுடன் தொடர்புடைய சிலருடன் நான் பேசிய வரை, இது குறித்து இவ்வளவு விரைவாக எதுவும் கருத்து தெரிவிக்க இயலாது என்றே கூறுகிறார்கள்.
ஓய்வு பெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா மிகவும் விவரமறிந்தவர்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர் இவர். இந்த அமைப்புக்கு பிபின் ராவத் தலைமை வகிக்கிறார்.
“ஆறு அல்லது எட்டு மாதங்கள் என்பது இவ்வளவு பெரிய விஷயத்தை மதிப்பிடுவதற்கான போதுமான காலம் இல்லை. தொடக்கப் பணிகள் முடிவடையவே காலம் பிடிக்கும். தற்போதுள்ள படையினரின் பலத்திற்கு இது அழுத்தம் தருவது போலிருக்கும். விதிகள் தெளிவாக விதிக்கப்பட்டுள்ளன. காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் இதை ஆதரிக்கிறேன்” என்று துவா கூறுகிறார்.
இந்த சி டி எஸ்-இடமிருந்து அரசு என்ன எதிர்பார்க்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
இது தொடர்பாக நீங்கள் பல அரசாங்க உத்தரவுகளையும் வெளியீடுகளையும் படிக்கலாம். ஆனால் சுருக்கமாக, இது ஒற்றை சேவை அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். கூட்டாகப் பொருட்களைக் கொள்முதல் செய்தல், ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல், வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், தற்போதுள்ள இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் கட்டமைப்பைச் சீர்செய்வது, உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியன இதன் நோக்கமாகும்.
ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சுதர்ஷன் ஸ்ரீகண்டே அவர்கள், “சி.டி.எஸ்-க்கு பொறுப்புகள் அதிகம் உள்ளன. தியேட்டர் (எல்லையில் உள்ள ராணுவ கட்டமைப்பு நிலைகள்) மற்றும் செயல் கமாண்டு பற்றி அலோசிக்கப்படவேண்டும். அவற்றின் வடிவம், பொறுப்பில் வரும் துறைகள், கட்டமைப்பு மற்றும் கூறுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் எல்லோரும் இதில் திருப்தியடையவில்லை” என்றார்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சைத், “நிச்சயமாக கோவிட் -19 நெருக்கடி மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவை இந்தக் கூட்டுப்படைத் தலைமை அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து நமது கவனத்தைத் திசை திருப்பியுள்ளன. ஆனால் பதவியை உருவாக்கி எட்டு மாதங்களுக்குப் பிறகு, விஷன் ஆவணம் வெளி வரப்போகிறது. பணிகள் நடக்கின்றன என்று நான் நிச்சயமாக நம்புகிறேன், ஆனால் இதுவரை நடந்திருக்க வேண்டிய பல விஷயங்களுக்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை.” என்று கூறுகிறார்.