அரசியல் காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசிகளை சீனா தானம் செய்வதாக சீனா மீது ஜேர்மனி குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது. தடுப்பூசி தானத்தை சீனா அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை தானம் செய்துவருவதுடன், அரசியல் ரீதியாக அவர்களை நிர்ப்பந்திக்க இந்த தடுப்பூசி தானத்தை அது பயன்படுத்திக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதை நாம் தடுக்கவேண்டுமானால், அவர்களை வெறுமனே விமர்சித்தால் போதாது, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்தாகவேண்டும் என்றார் அவர்.
அது என்ன மாற்று ஏற்பாடு என்றால், நாம் அந்த நாடுகளுக்கு நம்மிடம் உள்ள தடுப்பூசிகளை வழங்குவதாகும் என்று கூறிய அவர், மக்களுடைய உயிரைக் காப்பாற்றுவதை முன்னுரிமையாக கொள்ளாமல், தங்கள் தாக்கத்தை பல்வேறு நாடுகளில் பரப்பும் நோக்கில் மட்டுமே தடுப்பூசிகளை பயன்படுத்தும் சீனா மற்றும் ரஷ்யாவின் இந்த செயல்பாடுகளை தொடரவிடக்கூடாது என்றார்.
சீனா சுமார் 40 ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தானம் செய்வதாக கூறியுள்ள நிலையில், அது எந்த உள் நோக்கமும் இல்லாத தன்னலமற்ற நோக்கத்துடன் செய்யப்படுவதாக கூறியிருந்தது.
ஆனால், சீனாவின் மேற்கு பகுதியான Xinjiangஇல் மனித உரிமைகள் குறித்த விடயங்களில் தலையிடுவதை உக்ரைன் நிறுத்தாவிட்டால், சீனத் தயாரிப்பான தடுப்பூசியை தரமாட்டோம் என சீனா உக்ரைனை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.