யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டு, மீள் அமைக்கப்பட்ட இந்த விடயம் தீர்க்கப்பட்டது என்பதில் எமக்கு முழு உடன்பாடு இல்லை, நினைவுத்தூபி உடைக்கப்பட்டவுடன் தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு எழுந்ததை அடுத்தே இந்த விடயத்தை சற்று தணிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றம் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பிலேயே இதனை அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அதன் காரணமாக அது அகற்றப்பட வேண்டிய ஒன்று என்று கூறுவது, இந்த மிலேச்சத்தனத்தை இன்னும் மோசமாக்கும் செயலாகும்.
யுத்த நினைவு தூபிகளுக்கு உள்ளூராட்சி சபைகளின் கட்டட அனுமதி தேவையில்லை. அப்படி இல்லையென்றால் வட-கிழக்கு முழுவதும் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் யுத்த நினைவு தூபிகளும் உடைக்கப்பட வேண்டும். இப்படியான தூபிகள் கிளிநொச்சி, ஆனையிறவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் பல இடங்களிலும் உள்ளன.
இந்த யுத்தத்தில் சில ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழந்தமை உண்மையே. அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் எண்ணிலடங்காத பொது மக்களும் கொல்லப்பட்டார்களே. மற்றது எதிர்தரப்பு போராளிகள். அவர்களையும் நினைவு கூர வேண்டாமா?
யுத்தத்திலே இழந்தவர்களை ஒரு சமூகமாக கூடி நினைப்பதற்கும், துக்கப்படுவதற்கும் உதவும் வகையில் நினைவு தூபிகள் பிரத்தியேகப்படுத்தப்பட்ட பொது இடமாக அமையலாம். அந்த இடம் அவர்களுக்கு விசேடமான ஒன்றாக இருக்கும். அங்கே அவர்கள் கூடி ஒருவரை ஒருவர் விசாரித்து ஆறுதல் சொல்லலாம். நினைவு தூபிகள் உயிரோட்டமுள்ள சரித்திர பாடங்களாகவும் அமையும்.
அங்கே இளைய சமூகத்துக்கு யுத்தத்தின் காரணிகளையும் விளைவுகளையும் எடுத்துக் கூறி இனப்பிரச்சனை ஆயதப் போராட்டமாக மாறுவதற்கு முன்னர் தீர்கப்பட வேண்டியதன் அத்தியாவசியத்தை விளக்கலாம். பல்கலைக்கழக சமூகத்தினர் மரணித்ததை நினைவு கூறுவதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகம் ஒன்றில் அப்படியான தூபியை அமைப்பதன முக்கியத்துவம் இது தான்.
யுத்த நினைவு தூபமொன்று நிறுவப்படுகிற போது அது இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு புனித பூமியாகிறது. அதனால்தான் இந்த தூபி உடைத்தழிக்கப்பட்ட போது பெரு வெள்ளமாக உணர்வுகள் வெளிவந்தன.
இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லிம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இந்த விடயம் “தீர்க்கப்பட்டது” என்பதில் எமக்கு முழு உடன்பாடு கிடையாது.
தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் இந்தப் விடயத்தை சற்று “தணிக்குமாறு” அரசாங்கம் தனக்குச் சொன்னதாக துணைவேந்தர் கூறுவதை நாம் செவிமடுத்தோம். அத்திவாரக் கல் வைத்தது, செய்த தவறுக்கு வருந்தி அதை திருத்துவதாக இல்லாமல், வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்.
இந்த நினைவு தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாய் இருந்த அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி உடனடியாக அது மீள நிர்மாணிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.