தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் – தினேஷ் குணவர்தன

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் – தினேஷ் குணவர்தன

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள் விரும்பினால் வெளிநாடுகளுக்குச் சென்று மாவீரர்களைச் சுதந்திரமாக நினைவேந்தலாம்.

அங்கு அவர்களுக்குத் தடைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள்.

அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் கோரி அங்கு வாழும் சில முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் தாளத்துக்கு இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் மக்களும் ஆடுகின்றார்கள்.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். எனவே, இங்கு அவர்களை  நினைவுகூர அனுமதி இல்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளிநாடுகள் தடை செய்திருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நினைவு கூருகின்றார்கள் என்பதற்காக இங்கு நாம் இங்கு  அனுமதி வழங்க முடியாது.

இங்கு மாவீரர் நாள் நிகழ்வை நடத்த கடந்த நல்லாட்சியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை படு முட்டாள்தனமாகும்.

அது ஆட்சியில் இருக்கும் தம்மைக் காப்பாற்றி வந்தமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் அரசு வழங்கிய நன்றிக் கடனாகும்.

இந்நாட்டின் சட்டத்தை மீறி நீதிமன்றத் தடையுத்தரவுகளை மீறி மரணித்த விடுதலைப்புலிகளை நினைவு கூர்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *