தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சிறந்த நாடகம் ஆடுகிறதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,சென்ற அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை மாற்றுகின்ற அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர்கள். இருந்தாலும் கல்முனை விடயத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்து பிரதமர் மற்றும் துறைசார்ந்த அமைச்சர்களின் கவனத்தில் கொண்டு போவதில் நான் மிகவும் பாடுபட்டவர்.இது உண்மையில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதி கூட இதற்கான முன் முடிவுகளை நிறைவேற்றுகின்ற கட்டத்திற்குள் அரசாங்கம் தற்போது வந்துள்ளது.இதை அறிந்து கொண்டு பல அரசியல்வாதிகள் இதை அரசியலாக்கி அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்கான விடயமாக தான் வடக்கு பிரதேச செயலகத்தை பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் இது அம்பாறை மக்களது வாக்கு பிரச்சினை அல்ல. இது எமது இனத்தை காப்பதற்கான ஒரு பிரச்சினையாக தான் நான் பார்க்கின்றேன். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் நான்.இந்த விடயத்தில் எங்களுடன் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று இவ்விடத்தில் நான் அழைப்பு விடுக்கின்றேன். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவங்கள் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது.
இதைப் பற்றி கதைப்பதற்கு இதை உரிய முறையில் நாகரீகமான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் இதற்காக அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்றால் அதை நாங்கள் வரவேற்கின்றோம்.அதை விடுத்து இதை நான் தான் செய்கின்றேன், நான்தான் செய்கின்றேன் என்று இந்த விடயத்தை ஒரு கேலிக்கூத்து ஆக்காமல் அனைவரும் ஒன்று திரண்டு நிற்க வேண்டும். தற்போது இது தொடர்பாக பேசுவதும் பேச்சுவார்த்தை நடத்துவதும் ஒரு விதண்டாவாதம்.
இந்த விடயங்களை ஒரு அரசியலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே அனைத்து மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பாறை மக்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன், நான் ஜனாதிபதியையோ பிரதமரோ சந்திக்கின்ற வேளைகளில் இந்த விடயம் தொடர்பாக தான் மிக முக்கிய கவனம் எடுக்கின்றேன் என்பதை தெரியப்படுத்துகிறேன்.இதற்கான பத்திரங்களை கூட அமைச்சர் சமல் ராஜபக்ஷ தற்போது தயார்படுத்தி உள்ளார். அதற்கான விவரங்கள் அவரிடம் இருக்கின்றது. நாங்களும் தகவல்களை வழங்கியுள்ளோம். ஆகவே இதை நாங்கள் கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்முனை பிரதேச செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தங்களது வரையறைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அவர்களும் ஒரு அரசியல்வாதிகள் போன்று செயற்பட்டு இதை பாரிய பிரச்சினையாக உருவாக்கி உள்ளார்கள். எனவே இவ்விடத்தில் அனைவரும் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
ஜனாதிபதி தேர்தலில் இது ஜனாதிபதியின் வாயால் அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதி பிரதம மந்திரியின் வாயால் அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பது யாவரும் அறிந்த உண்மை.ஆகவே வாக்குறுதி அளித்துவிட்டு அரசு ஏமாற்றும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த விடயத்தில் அனைவரும் ஒத்துழைத்து நிற்கவேண்டும் என்பதை இவ்விடத்தில் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.