பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரோ விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களில் நடேசன் தருமராசா தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்புவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் ஜோசப் செபஸ்ரியான் என்பவரும் கைது செய்யப்பட்டு இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து எட்டு வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராசா சர்வேஸ்வரன் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் இன்று நிரபராதியென இனங்காணப்பட்டு நீதிமன்றினால் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் வவுனியா மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புனர்வாழ்வின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்த கண்ணதாசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேன்முறையீட்டு மனு மீது இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுனர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், எதிரியை விடுவித்து விடுதலை செய்து கட்டளையிட்டார்.