ரணில் விக்ரமசிங்கவின் தலையும், மகிந்த ராஜபக்சவின் உடலும் இணைந்தால், நாட்டுக்கு பாரிய சேவையை செய்ய முடியும் என நாட்டு மக்கள் ஒரு காலத்தில் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்று நாராஹென்பிட்டி அபயராம விகாரையில், முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார். இந்த நாட்டில் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய தலைவர் ரணில் விக்ரமசிங்க. ரணில் விக்ரமசிங்கவின் தலையையும், மகிந்த ராஜபக்சவின் உடலையும் ஒன்றாக இணைத்தால், நாட்டுக்கு பாரிய சேவைகளை செய்ய முடியும் என மக்கள் கூறினர்.
இதனை நான் கூறவில்லை. அப்படியான நிலைமை நாட்டில் இருந்தது. ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். நான் எதனையும் எப்போது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவன் அல்ல.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்தமை எல்லோருக்கும் நல்லது என்பதே எனது நம்பிக்கை எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.