வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்ததாக, காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், இன்னும் 13 நாள்கள் மட்டுமே ஜனாதிபதியாக பணியாற்றுவார் என இருந்த நிலையில், தற்போது மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயருடன் அரியாணையிலிருந்து அவர் கீழே தள்ளிவிடப்படவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் காரணமாக உலக தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இதேவேளை ட்ரம்பை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் எனவும் வெர்மான்ட் மாகாண குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், என்.ஏ.ஏ.சி.பி. (நேஷனல் அசோசியேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கலர்ட் பீப்புள்) தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து கோரியுள்ளனர்.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25ஆவது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.
1967ஆம் ஆண்டு இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால் இப்படியொரு சரித்திர மாற்றம் நிகழுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.