மேடை பதாகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் படங்களை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தாதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.
ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது முதல் மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
மார்ச் 7ம் திகதி சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் பிரபாகரன் படம் இடம்பெறாதது விமர்சனத்துக்குள்ளானது.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதள பக்கங்களிலும் பிரபாகரன் படங்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் தனியார் தொலைக்கட்சி நேர்காணில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் படங்கள் இடம்பெறாதது குறித்து விளக்கமளித்துள்ளார்.
என்னுடைய கடவுச்சீட்டு இல்லை, என்னால் எந்த நாட்டிற்கும் போக முடியாது. LTTE-ஐ சீமானை வைத்து தான் மீண்டும் கட்டமைக்கிறார்கள் என புகார் அளித்து என்னை முடித்துவிட்டார்கள்.
பிரபாகரனின் படங்களை யூடியூபில் போட்டால் அது முடக்கப்படுகிறது, வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டால் அந்த பக்கத்தை முடக்குகிறார்கள். இத்தனை நெருக்கடிகளை நான் எதிர்கொண்டு ஓடுகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 07-03-2021 அன்று சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
மேடை பதாகையில் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள். இவ்வளவு கடினமான சூழலில் தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என சீமான் என்று குறிப்பிட்டுள்ளார்.