தவறான அழைப்புகளைக் கண்டறியும் செயலியாக ட்ரூகாலர் இருக்கிறது.

தவறான அழைப்புகளைக் கண்டறியும் செயலியாக ட்ரூகாலர் இருக்கிறது.

கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் ட்ரூகாலர் செயலி அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக இணை நிறுவனர் ஆலன் மமேடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சேமித்து வைக்காத எண்களிலிருந்து வரும் அழைப்புகள், தவறான அழைப்புகளைக் கண்டறியும் செயலியாக ட்ரூகாலர் இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்களால் இச்செயலி பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. உலகளவில் ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்துபவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 20 கோடி. இது மொத்த எண்ணிக்கையில் 73 சதவிகிதம். 2020 ஆண்டு முடிவில் 25 சதவிகித புதிய பயனர்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதற்கு முன் 21.3 கோடியாக இருந்த பயனர்களின் எண்ணிக்கை 2.67 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஸ்வீடன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட இச்செயலியின் இணை நிறுவனர் ஆலன் மமேடி இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “2018ஆம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 40 சதவிகித பங்கை கொண்டிருந்தோம். அது 2019ஆம் ஆண்டில் 45 சதவிகிதமாக உயர்ந்தது. இப்போது 50 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் லாக்டவுனே. லாக்டவுனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். அதனால் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன்கள் வாங்கினர். இதன்மூலம் எங்களது செயலியின் பதிவிறக்க விகிதமும் கணிசமாக உயர்ந்தது. எனினும், எங்கள் ஊழியர்களின் திறமையால் தான் ட்ரூகாலர் ஒரு பிராண்டாக மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

உதாரணமாக, 2020ஆம் ஆண்டில் ஸ்மார்ட் எஸ்எம்எஸ், அழைப்பவர்களின் விவரத்தை முழு திரையில் காட்டும் வசதி, அழைப்பவர்கள் என்ன காரணத்திற்காக அழைக்கிறார்கள் உள்ளிட்ட புதிய வசதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். முக்கியமாக, பின்தொடர்பவர்கள், தொல்லை கொடுப்பவர்கள் ஆகியோரிடமிருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் பெண்கள் பாதுகாப்பு பிரச்சாரத்தையும் தொடங்கினோம். இதுபோன்ற பொறுப்பான பல்வேறு அம்சங்களை நாங்கள் வழங்கியதால் தான் இந்தியாவில் மிகப்பெரிய பிராண்டாக வளர்ந்துள்ளோம். அதேபோல, கூடுதல் வசதிகளைப் பெற கட்டணம் கட்டுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் உயர்ந்துவருகிறது. எங்களுக்கு உலகம் முழுவதும் 15 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்கள். உலகளவில், குறிப்பாக இந்தியாவில் பணம் செலுத்தி ஒரு சேவையைப் பெறுவதற்கு பயனர்கள் பழகிவருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமாக இந்தப் பழக்கம் உயர்ந்திருக்கிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *