பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாறு (வெலி ஓயா) பகுதியில் அண்மையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் சித்த மத்திய மருந்தகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள சித்த மருந்தகத்தின் பெயர்ப் பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மொழி இரண்டாம் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த திறப்பு விழா நிகழ்விற்கு மதகுருக்களின் சார்பில் பௌத்த மதகுரு ஒருவரே அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே துரைராசா ரவிகரன் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தாயகப் பரப்புக்களில் ஒன்றான, வடமாகாணத்தில் தமிழ் மொழி ஓரங்கட்டப்படுவதையும் சிங்களம் முன்னுரிமைப்படுத்தப்படுவதையும் ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.