தமிழர் தாயகப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை தென்னிலங்கையில் செயற்படுத்த முயற்சிப்பதாக வடக்கு கிழக்கு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு ஆயர்களுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த விடயம் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயர்களுக்கும் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லருக்கும் இடையிலான சந்திப்பு யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் புறக்கணிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும், வடக்கு கிழக்கில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்க முனையும் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அவற்றை தென்னிலங்கையில் செயற்படுத்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தாயக பகுதிகளில் தற்போது நிலவி வரும் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, சிறிலங்கா அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி குறித்தும் தூதுவர் டொமினிக் பார்க்லருக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.