சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற எனது அம்மாவை மீட்டு தாருங்கள் என மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.இந்த பெண் மாமியாரின் தயவில் வசிக்கும் ஊமைப்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் இல 30 இராஜசிங்கம் வீதி திருநகர் என்னும் முகவரியினையும், J/67 திருநகர் என்னும் கிராமசேவகர் பிரிவில் வசித்த மரியன் அல்பிரட் யேசுராணி என்னும் பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
குறித்த பெண் அங்கு சென்றதில் இருந்து எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.குறித்த பெண்ணின் வாய் பேசமுடியாத மகள் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எல்லுக்காடு பகுதியில் வசித்து வருகின்றார்.இவரது கணவனுக்கும் காது கேட்காது எனவும், கணவனின் தாயருக்கு கால் இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமியாரின் தயவிலேயே இவர்கள் வசித்து வருகின்றனர்.
மிகவும் வறுமையில் பல துன்பங்களுடன் வாழும் இந்த குடும்பம் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் வசித்து வருகின்றனர். இவ்வாறான சூழ் நிலையிலேயே வெளிநாட்டிற்கு சென்ற தனது தாயை மீட்டுத் தரும்படி வாய் பேச முடியாத மகள் கதறுகின்றார்.அதேவேளை தனது சம்மந்தி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை என்றும் வாய் பேச முடியாத காது கேட்காத தனது மகன் மற்றும் மருமளுடன் வறுமையில் வாடுகின்றேன் எனவும் மாமியார் கவலை வெளியிட்டுள்ளார்.