இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையிலான வழித்தடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பலர் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகவே அமீரகம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக விமான நிறுவனங்களை அணுகியபோது, அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தனியார் விமானங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால், அந்த நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தின. எனினும், வசதி படைத்தவர்கள் அந்த தொகையை கொடுத்து துபாய்க்கு பறந்தனர். பணம் செலுத்த முடியாதவர்கள் ஏமாற்றத்துடன் பயணத்தை ரத்து செய்தனர்.
டிக்கெட் கட்டண ஒப்பீட்டு வலைத்தளங்களில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. மும்பையிலிருந்து துபாய்க்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு வழிப்பாதை வர்த்தக விமானங்களில் டிக்கெட் கட்டணம் 80,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டது. இது வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம்.
டெல்லி-துபாய் வழித்தடத்திற்கான டிக்கெட்டுகள் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தது. இது சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தைவிட ஐந்து மடங்கு அதிகம்.இந்தியாவுக்கான 10 நாட்கள் விமான தடையானது நடைமுறைக்கு வந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிக்கெட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை.ஐக்கிய அமீரகத்தில் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இது அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்தியர்களில் பெரும்பாலானோர் துபாயில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.