அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தீயணைப்பு துறைக்கு சொந்தமான தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று லீஸ்பர்க் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.இந்த ஹெலிகாப்டரில் 4 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து உடனடியாக மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.இதில் லீஸ்பக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
தரையில் மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஹெலிகாப்டர் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது.இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன.