இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அதிகாலை வேளை ஏன் துணைவேந்தர் அடிக்கல் நாட்ட வந்தார் என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நினைவுத் தூபி உடைக்கப்பட்டதன் பின்னர் மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பொது மக்கள் தமது எதிர்ப்பினை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
இதற்கிடையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு துணைவேந்தர் மாணவர்களை நேரில் சந்தித்து மீண்டும் தூபியினை கட்டுவதாக வாக்களித்துள்ளதுடன் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இச்சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும், சிவாஜிலிங்கமும் மாணவர்களை உடனடியாக சந்தித்திருந்தனர்.
இதன்போது மாணவர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், இந்த நினைவுத்தூபியை நணபகல் 12 மணிக்கு நாட்டியிருக்கலாம் அல்லவா? துணைவேந்தரின் இந்த செயற்பாடு இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடத்தப்படும் ஹர்தாலை பிசுபிசுக்க செய்யும் முயற்சியாகவே பார்க்கிறோம். நினைவுக்கல் நாட்டியது என்ற செய்தி பரவியுடன் வர்த்தகர்கள் தமது கடைகளை திறக்க தொடங்கியுள்ளனர்..எனவே இதில் ஏதோ கபட நோக்கம் உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.