மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 27-ந்தேதி மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அதை கண்டுகொள்ளாத ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மியான்மரில் இதுவரை பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே மியான்மர் ராணுவம் கைது நடவடிக்கையிலும் தீவிரமாக உள்ளது. போராட்டம் நடத்திய முக்கிய பிரமுகர்களை கைது செய்து வருகிறது. இதனால் மியான்மரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அந்நாட்டின் தென் கிழக்கில் உள்ள கெய்ன் மாகாணத்தில் வசிக்கும் கரேன் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் சுயாட்சி கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இதையடுத்து கெய்ன் மாகாணம் முட்ரா மாவட்டத்தில் மியான்மர் ராணுவம் வான் தாக்குதலில் ஈடுபட்டது. கிராமங்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசினர். இதனால் ஆயிரக்கணக்கானோர் எல்லையில் உள்ள தாய்லாந்து நாட்டுக்கு தப்பி ஓடி தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என்று அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி காத்தரீன் தெரிவித்தார்.மியான்மரில் கெய்ன் மாகாணத்தில் கரேன் இனத்தவர்கள் மீது ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்குள்ள கிராமத்தினர் காடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.