உலகத்திலுள்ள பறக்கும் பூச்சியினங்களில் மிகவும் வேகமாகப் பறக்கக்கூடியவை இந்த தும்பி இனமே. இவை மணித்தியாலத்திற்கு 25 மைல்கள் தூரம் பறக்கக்கூடியவை. ஜலப்பிரளய காலத்திற்கு முன்பதாக இரண்டரை அடி நீளமான செட்டைகளைக்கொண்ட தும்பியினங்கள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் பலம் வாய்ந்தவைகூட, இவற்றின் உடம்பிலுள்ள அரைவாசித் தசைகள் அவை பறப்பதற்காகவே உபயோகப்படுத்தப் பயன்படுகிறது. மேலும் இவை தம்மைவிட இருமடங்கு பாரமான சுமையை தூக்கிப் பறக்கக்கூடியவை.
இவற்றின் கால்கள் தரையிறங்கும் வேகமும் விதமும் மிகவும் வியப்புக்குரியதும் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த விமான தரையிறக்க பொறிமுறையையும் ( ) விட மிகவும் நுணுக்கமானதும் இணையற்றதுமாகும். இவை மிக வேகமாக எத்திசை நோக்கியும் உந்தி எழும்பிப் பறக்கூடியவை, அத்தோடு பின்நோக்கியும் எழும்பிப் பறக்கக் கூடியவை. மேலும் இவை தமது நான்கு செட்டைகள் மூலம் ஒரு அச்சில் இருந்து சுழல்வதுபோல் திரும்பி மிக வேகமாக நகர்வை ஏற்படுத்தக்கூடியவை.
இதனுடைய கூட்டுக் கண்கள் 30,000 வில்லைகளைக் கொண்டவை, அதன்மூலம் 360 பாகை சுற்றியுள்ளவற்றைப் பார்க்கக்கூடியவை. மூன்று அடி தூரத்திலுள்ள இரையை ஒரு வினாடிக்குள் தாக்கி தான் இருந்த இடத்திற்கு திரும்பக்கூடியவை. இவற்றை அமெரிக்க விமானப்படை ஆராச்சியாளர்கள் அதிவேக காற்றுக் குழாய்க்குள் விட்டு பரிசோதனை செய்து வருகின்றார்கள். இவற்றின் பறக்கும் பொறிமுறை (Aerodynamic abilities) வியப்பிற்குரியது மட்டுமல்ல இவற்றிலிருந்து கற்று இன்றைய பல அதி நவீன விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.