துருக்கி ஆயுத கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர்…

துருக்கி ஆயுத கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர்…

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. இஸ்டான்புல்லில் இடம்பெறும் நான்கு நாள் சர்வதேச பாதுகாப்பு தொழிற்துறை கண்காட்சியில் (IDEF’21) கலந்து கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகாரையும் (Hulusi Akar) சந்தித்துள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி – 2021இன் ஓர் அங்கமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச பாதுகாப்பு தொழில்முறைக் கண்காட்சி – 2021இல், ஆயுதங்கள், தரைப்படை வாகனங்கள், இராணுவ இலத்திரனியல் சாதனங்கள், கடற்படை ஆயுத தளவாடங்கள், விமான முறை, தளவாட வாகனங்கள், விநியோக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

Sri lanka flag combined with turkey flag

இதன்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆயுதங்கள் எதனையும் கொள்வனவு செய்ததா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தக் கலந்துரையாடலில் துருக்கிக்கான இலங்கை தூதுவர் அதிமேதகு எம்.ஆர். ஹஸன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ உதவியாளர் கேர்ணல் கே. டபிள்யூ. ஜெயவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி – 2021 நிகழ்வானது ஓகஸ்ட் 17 முதல் 20 வரை, துருக்கிய ஆயுதப்படைகள் குழுமத்தின் ஏற்பாட்டுடனும் முகாமைத்துவத்துடனும் தூயாப் (TÜYAP) வர்த்தக மற்றும் ஒன்றுகூடல் மாநாட்டு மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. கடல், விமான மற்றும் நில பாதுகாப்பில் செயற்படும் சுமார் ஆயிரம் சர்வதேச நிறுவனங்கள் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *