உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.எனவே மாகாண சபையின் அனுமதியின்றி துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும் சீனா மற்றும் எந்தவொரு நாட்டிற்கும் விற்க முடியாது போயுள்ளதாக எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும்.துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது செயற்படுகின்றது. தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு 200 மில்லியன் டொலர்களே இலங்கைக்கு தேவைப்படுகின்றது.
இந்த தொகையை செலவிட்டு நாம் வலியுறுத்திய காலப்பகுதியில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் பொருளாதாரம் இந்தளவு பாதித்து இருக்காது.வர்த்தக நிலையங்களை மூடவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முயற்சிக்க வில்லை. மறுப்புறம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய தரப்புகளுடன் கலந்துரையாடியிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம்.சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடுகளின் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இறுதியில் பரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இதனை பரிஸ் கழகம் (Paris Club) என அழைப்பார்கள்.
இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த மாநாட்டின் ஊடாக கடன்நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த அமைப்பில் சீனா இல்லை. ஜீ-7 மாநாட்டில் சீனா உறுப்புரிமையை கொண்டுள்ளது. இங்கு கடன்கள் குறித்து பேசமுடியும். ஆனால் இலங்கையின் துரதிஷ்டம் யாதெனில் அந்த அமைப்பிலும் இலங்கை இல்லை.இவ்வாறானதொரு நிலைமையில் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது துறைமுக நகர் விடயத்தில் அரசாங்கம் செயற்படுகிறது. அதனால் தான் உயர் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது.
இது அரசாங்கத்தின் தோல்களின் முக்கியமானதொன்றாகும். ஏனெனில் தன்னிச்சையாக செயற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றம் தனது கடமையை செய்யும் என்பதை உணர்த்தியுள்ளது. அதே போன்று துறைமுக நகர் ஆணைக்குழு நிர்வாக கட்டமைப்பு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டுள்ளதால் சீனாவிற்கு தேவையான வகையில் நிலப்பரப்பை விற்க முடியாது.அனைத்திற்கும் மாகாண சபைகளின் அனுமதி அவசியமாகின்றது. எனவே ஆரம்பத்தில் சமர்பித்தது போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் முதலீடுகள் இங்கு வந்திருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.