தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.தபால் ஓட்டுகள் வினியோகிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 கட்ட பயிற்சிகள் முடிந்துள்ளன.இந்தநிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாளை (சனிக்கிழமை) 3-ம் கட்ட பயிற்சி நடக்கிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெறுகிறார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை ஆகும். எனவே தபால் ஓட்டுகள் வழங்கப்படாமல் விடுபட்ட ஊழியர்களுக்கு நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 3-ம்கட்ட பயிற்சியின் போது தபால் ஓட்டுகள் முழுமையாக வினியோகம் செய்யப்பட உள்ளன.ஊழியர்கள் அவர்கள் பயிற்சி நடைபெறும் இடத்திலோ அல்லது வாக்கு எண்ணிக்கை தொடங்கும் மே 2-ந்தேதிக்கு முன்பாகவோ தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.