தேர்தல் முறைமைகளில் மாற்றம் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் முறைமைகளில் மாற்றம் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மாற்றம் செய்வது தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினருக்கு நேற்று(06) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் தமது முன்மொழிவுகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, மாகாண சபை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கான தேர்தல்கள் கலப்பு முறையில் நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி, தொகுதிவாரியாக 150 உறுப்பினர்களும் விகிதாசார முறையில் 75 உறுப்பினர்களுமாக 225 நாடாளுமன்ற உறப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன், தொகுதிவாரியாக 125 உறுப்பினர்களும், விகிதாசார முறையில் 100 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவதை தாங்கள் எதிர்க்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, விகிதாசார முறையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் தனித்தனி மாவட்டங்களாக கருதப்பட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி, தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் மற்றும் குடிசன மதிப்பீடு போன்றவை தெளிவாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தொகுதிவாரியாக விருப்புகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்கும், விகிதாரசார ரீதியில் பிறிதொரு கட்சியை தெரிவு செய்வதற்குமான வாய்ப்பினை வாக்காளர்களுக்கு வழங்கும் வகையில் இரண்டு வாக்குச் சீட்டுக்கள் முறைமையும் முன்மொழியப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஈ.பி.டி.பி. வலியுறுத்தியிருப்பதுடன், குறித்த தேர்தலும் கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை கடந்த காலங்களில் தாங்கள் வலியுறுத்திய போதிலும், கலப்பு முறை மூலம் ஸ்திரமான ஆட்சியமைக்க முடியாமல் இருந்தமையினை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டமையினால் முழுமையான விகிதாசார முறையினை தற்போது முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குறித்த தெரிவுக் குழுவிற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் தேர்தல் முறை தொடர்பான முன்மொழிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக, செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *